Pages

Thursday, January 27, 2011

மிஷ்கின் எனப்படும் மனநோயாளிக்கு...-பாலமுரளிவர்மன்

இந்த� உலகின் மிகமுக்கியமான பிரச்னையாக இருப்பது எதுவென்றால், முட்டாள்கள் அதீத தன்னம்பிக்கையோடும் அறிவாளிகள் அவநம்பிக்கையோடும் தம்மீதே கொண்டிருக்கும் சந்தேகங்களோடும் வாழ்வதுதான்.
-ஷேக்ஸ்பியர்.
இதே சிக்கல் திரையுலகிலும் நீடிக்கிறது. தமிழ்த்திரையுலகில் ஒருவன் வெற்றியாளனாக உருவாகும்முன் சந்திக்கின்ற எண்ணற்ற போராட்டங்களுக்குள் முதன்மையானது, புத்திசாலிகளுக்கும் தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்பவர்களுக்கும் இடையேயான போராட்டம்தான்.
உடம்பெல்லாம் வாயாக, வாயெல்லாம் கொழுப்போடு திரியும் இந்த மிஷ்கின் சாதித்தது என்ன ? இந்த சமூகத்தில் எதை மாற்றியமைத்துவிட்டார் ?

Wednesday, August 4, 2010

கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா ?

“ஒழுங்கா படி. இல்லேன்னா உன்னை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வெச்சிடுவேன்!” – ஒரு தந்தை மகனிடம் பேசுவதாக சமீபத்திய ஆ.விகடனில் வெளிவந்த நகைச்சுவை துணுக்கு. வினவில் நேற்றுதான் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படும் பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் விளக்கிய கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்தவர்கள் எவரும் இந்த துணுக்கை படித்து சிரிக்க முடியாது.

Tuesday, August 3, 2010

அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன?


அறுசுவைகளில் இனிப்பை மட்டும் ருசியாக கொண்டாடும் குஷிப் பேர்வழிகளைத் தவிர்த்து அனைவரையும் அங்காடித் தெரு ஏதோ ஒருவிதமாய் பாதித்திருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது.

தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பேரங்காடியில் குவிக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான பொருட்களோடு பொருளாக ஆனால் சாயம் போய் வாடிப்போயிருக்கும் உயிருள்ள மனிதர்களை, சிப்பந்திகளை காட்டுவதற்கு ஒரு தமிழ் சினிமா இயக்குநர் துணிந்திருப்பது ஆச்சரியமானது. அதனால் பாராட்டுக்குரியது. ஆனால் பாராட்டியவர்களும், படத்தின் சோகத்தை அருந்தியவர்களும் இந்த நவீன கலை ஊடகத்தின் பிரதியினால் ஒரு பொதுவான மனிதாபிமானம் என்பதைத் தாண்டி ஒரு அழுத்தமான பாதிப்பை அடைந்திருப்பார்களா என்பதில் நிறைய ஐயமிருக்கிறது.

ஏழ்மையை பார்த்து மட்டுமே உணரும் எவரிடமும் ஏற்படும் மனிதாபிமானம் எத்தகையது? குறிப்பாகச் சொன்னால் ஏழ்மையை சுலபமாக புரிந்து கொள்ளமுடியுமா?

விபத்து, தற்கொலை, இரத்தம், எதிர்பாராத அடிகள், துன்பங்கள் என்பதைக் காட்டித்தான் ஏழ்மையைக் காட்ட முடியுமென்று வசந்த பாலன் நினைத்திருப்பது பா வரிசைப் படங்களிலிருந்து தமிழ் சினிமா மரபு கொண்டிருக்கும் உத்திதான். நல்லதங்காள் கதையைக் கேட்டு வளர்ந்த நாடுதானே இது? ஆனால் இன்று நல்லதங்காள் என்ற சோகத்தின் அரசி கதையில் அல்ல, அன்றாடம் நாளிதழில் அடிபடும் ஒரு செய்தித் துணுக்காக மாறிவிட்டாள். நமக்கும் நல்லதங்காள் உத்தி இன்று போதுமானதல்ல.

_________________________________________

கண் முன்னே கொடுரமாக அடிபட்டுத்தான் ஒரு எளியவனின் துன்பத்தை உணர முடியுமென்றால் நாம் எந்தக் காலத்திலும் உழைக்கும் வர்க்கத்தின் அவலத்தை புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஏழ்மையின் வாழ்வில் இத்தகைய திடுக்கிடும் திருப்பங்களை விட மெல்லக் கொல்லும் ‘அமைதியான’ வாழ்க்கைதான் கண்முன் காணும் உண்மை. அந்த உண்மையை ஊடுறுவிப் பார்ப்பது எப்படி? ஒரு விபத்தில் செத்துத்தான் ஒரு ஏழை தனது அவலத்தை புரியவைக்க முடியுமென்றால் சாகாத ஏழைகளின் கதி?

கே.கே நகர் விபத்து, லிங்கத்தின் தந்தை விபத்து, இரக்கமற்ற முதலாளி அண்ணாச்சி, கொடுரமான கங்காணி அண்ணாச்சி, இதயத்தை உலுக்கும் அந்த காதல் பெண்ணின் தற்கொலை, அவள் காதலனது மனமுடைந்த அவலம், கனியின் தங்கை நாகம்மையின் சித்தரிப்பு, நின்ற கால் வியாதியால் சாகும் தொழிலாளி, மந்தைகளைப் போல அடைந்து வாழும் சிப்பந்திகள் என்று படம் முழுவதும் வரும் சோகங்கள், அவை கற்பனையல்ல உண்மை என்றாலும் படத்தில் அதிர்ச்சியை மிகையாக ஏற்படுத்த வேண்டுமென்பதாக மாறிவிட்டன. இவை அளவாக பயன்பட்டால் இயக்குநர் தான் காட்டவிரும்பும் கதை உணர்ச்சியை உணர்த்த முடியாது என்று நினைத்திருப்பரானால் அது அவரது பலவீனம். இயல்பாக செய்திருந்தால் அது அவரது அறியாமை.

அழகான, சுத்தமான, நவீனமான வாழ்க்கையில் முங்கித் திளைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தை இப்படிக் காட்டித்தான் அழவைக்க முடியுமென்றால் அந்த அழுகையின் காலம் சிலமணித்துளிகள் மட்டும்தான். சாரமாகச் சொன்னால் ஏழைகளின் அவலத்திற்கு காரணமான வாழ்க்கையை வாழக்கூடியவர்களில் நானும் ஒருவன் என்ற எண்ணத்தை ஆழமாக உணர்த்த வைப்பதுதான் கடினமென்றாலும், தேவையானது. அது அங்காடித் தெருவில் இல்லை.

ஒரு மலக்குழிக்குள் இறங்கும் தொழிலாளியின் நிலையைப் புரிந்து கொள்ள காமராவும் கூட இறங்குவது தவறென்று சொல்லவில்லை. ஆனால் சாக்கடைகளின் வாழ்க்கையை அறியாத ‘சுத்தமான’ சாக்கடைகளை அது மட்டுமே சுத்தப்படுத்திவிடாது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஜி – 8 குழும நாடுகளது அதிபர்களின் கூட்டத்திற்கு மேலைநாடுகளின் தன்னவார்வக்குழுக்கள் MAKE POVERTY HISTORY வறுமையை வரலாற்றாக்கு என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை நடத்தின. மேற்கத்திய நாடுகளின் பிரபலமான எல்லாப் பாடகர்களும் அதில் பங்கேற்றனர். இவர்களது கோரிக்கை வறுமையில் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை மேலைநாடுகள் இரத்து செய்யவேண்டுமென்பதுதான். ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையே ஏகாதிபத்தியங்களின் உற்பத்தியென்பதை மறுக்கும் இந்த அபத்தத்தை விட்டுவிட்டு பார்த்தால் ஒரு காட்சி மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது.

இசை நிகழ்ச்சிகளின் இடையில் அவ்வப்போது ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை புள்ளவிவரங்களையும், சில ஆவணப்படங்கள் போன்ற காட்சித் துணுக்குகளையும் காட்டினார்கள். ஒரு ஆப்பிரிக்க குடிசையில் தாயும் சிறு குழந்தைகளும். குழந்தைகள் அம்மாவிடம் பசிக்கிறது என்று அடிக்கடி பலவீனமான குரலில் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அம்மாவும் சமையல் தயாராகிறது என்று அடுப்பையும், பாத்திரத்தையும் காட்டியவாறு இருக்கிறாள். பாத்திரத்திலிருந்து சமையலின் புகை பரவுகிறது. அதைப் பார்த்தவாறே குழந்தைகள் பின்னர் ஏக்கத்தில் தூங்கிப் போகிறார்கள். உண்மையில் அந்தப் பாத்திரத்திலிருந்த நீரில் ஏதோ சில மரக்குச்சிகள் மட்டுமே இருந்தன. ஏதோ ஒன்று சமைப்பதாக குழந்தைகளை போக்குகாட்டி தூங்கவைக்கும் அந்தப்பெண்ணுக்கு இது தினசரி வாடிக்கை. எந்தக்குறுக்கீடோ, தயாரிப்போ, திட்டமோ இன்றி எடுக்கப்பட்ட இது போன்ற பல காட்சிகளைக் காட்டினார்கள்.

ஆப்பிரிக்க குழந்தைகளின் எலும்புக்கூடு தோற்றம், வயிறு வீங்கிய உடம்பு, ஈ மொய்க்கும் உதடுகள், அப்புறம் எத்தனை இலட்சம் பேர் இறந்தார்கள் என்ற காட்சிகளும், செய்திகளும், புள்ளிவிவரங்களும் உணர்த்தத் தவறிய ஒரு வேதனையை அப்போது நான் உணர்ந்தேன். நான் இலக்கியவாதி இல்லையென்பதால் அந்த உணர்ச்சியையும், காட்சியையும் இங்கே அப்படி பதிவு செய்திருப்பேனா என்பது சந்தேகம் என்றாலும் யாரும் அந்த தாயின் வேதனையைப் புரிந்து கொள்ளலாம்.

நேரிட்டு பார்க்கும் யதார்த்தம் மட்டுமே உண்மையல்ல. யதார்த்தம் பற்றி பழக்கடுத்தப்பட்ட பார்வை வழியாகவே நாம் பார்க்கிறோம். அதுவே தன்னளவில் உண்மையை வழங்கிவிடாது. விக்கிபீடியாவிலோ, இல்லை பல புள்ளிவிவரங்களிலோ இருக்கும் செய்திகளையும், கணக்குகளையும் பலர் உண்மைகளாக நம்புகிறார்கள். அந்த செய்தியை அதனோடு தொடர்புள்ள ஏனைய சமூக வாழ்வின் இயக்கத்தை அல்லது வரலாற்றின் உணர்ச்சியில் பொருத்தித்தான் புரிந்து கொள்ள முடியும். அல்லது உண்மையைக் கண்டுபிடிக்கமுடியும்.

___________________________________________________

வசந்த பாலன் அங்காடித் தெருவை எடுப்பதற்காக நிறைய முயற்சிகள் செய்து விவரங்கள் சேகரித்திருக்கிறார். இதையெல்லாம் உள்ளொளியில் கண்டு கொள்ளலாம் என்ற ஜெயமோகன்களது மேதைத்தனம் அவரிடமில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இயக்குநர் சேகரித்த விவரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, முரண்பட்டு, வேறு ஒரு உண்மையை, யதார்த்த்த்தை, புதிய கண்டுபிடிப்பை உணரும், கலையும் தத்துவமும் இணைந்து சாத்தியமாக்கும் கதையை அவரால் எழுதமுடியவில்லை. அதுதான் மிகையான சோகக்காட்சிகள் மூலம் காட்டிவிடலாம் என்று போயிருக்குமோ?

முதலாளி அண்ணாச்சியின் சித்தரிப்பு ஒரு எடுத்துக்காட்டு. தீவிர கடவுள் பக்தர், எச்சக்கையை ஆட்டினால் இங்கேயே ஆள் கிடைக்குமென்ற திமிரான எக்காளம், விளம்பரத்திற்காக சினேகாவை முந்தானையை விரித்து ஆடச் சொல்வது, பொய்ப் புகார் மூலம் கடைச் சிப்பந்தியான லிங்கத்தை போலீசு மூலம் அடிக்க வைப்பது, வியாபார நலனுக்காக எப்போதும் இரக்கமின்றி பேசுவது எல்லாம் முதலாளி அண்ணாச்சியைப் பற்றிய உண்மையான சித்தரிப்புகள் என்றாலும், அண்ணாச்சிகள் என்று பார்த்தாலும், நவீன முதலாளிகள் என்று போனாலும் அவையே முழு உண்மையல்ல.

அம்பானியோ, டி.வி.எஸ், ஹூண்டாய் முதலாளிகளெல்லாம் அண்ணாச்சிகள் போல கடுஞ்சொல் பேசி சாட்டையைச் சுழட்டும் நம்பியார் டைப் வில்லன்களல்ல. ஒரு வேளை வசந்த பாலன் அவர்களைப் பற்றி படமெடுக்க விவரங்கள் சேகரித்திருந்தால் அவரால் மணிரத்தினத்தின் குரு போலவோ அல்லது அதற்கு கம்மியாகவோதான் எடுத்திருக்க முடியும். ஆனால் இந்த நாகரீக முதலாளிகள்தான் அநாகரீக அண்ணாச்சி முதலாளிகளை விட தொழிலாளிகளை மட்டுமல்ல முழு சமூகத்தையும் இழிவாகவும், சுரண்டியும் நடத்தி வருகிறார்கள். சோப்பு, சீப்பு, பாத்திரம், துணி விற்பதற்காக சிநேகவை பளிச்சென்று சிவப்பு கலர் சேலையில் குத்தாட்டம் போடச்சொல்லும் அண்ணாச்சியை விட, கிங்ஃபிஷரின் காலண்டருக்காக ஏதோ ஒரு தீவில் பிகினி, முக்கால் நிர்வாணப் பெண்களைக் கூட இருந்து படமெடுக்கும் விஜய் மல்லையாக்கள்தான் ஆபத்தானவர்கள்.

படத்தின் கதையில் நாயகர்களான கடைச் சிப்பந்திகளது வில்லன்களாகத்தான் அண்ணாச்சி வருகிறார். ஆனால் முதலாளிகளான அண்ணாச்சிகளது ஆளுமையை அப்படி வில்லன் பார்வை இல்லாமலே கூட சாரத்தைச் சரியாகச் சித்தத்திருப்பதன் மூலம் அந்த நோக்கத்தை இன்னும் பரந்த அளவில் செய்திருக்க முடியும். ஏனெனில் அண்ணாச்சிகளின் உருவாக்கம் என்பது அவர்களது தனிப்பட்ட பண்புநலன்களால் மட்டும் உருவாகிவிடுவதில்லை. பல்வேறு சமூகக்காரணிகளின் பின்புலத்தில்தான் அவர்கள் ‘அப்படி’ இயங்குகிறார்கள்.

____________________________________________________

ஏதோ ஒரு தீபாவளி நாளில் கடைத்தெருவுக்கு சென்ற போது எல்லா கடைகளும் பூட்டியிருந்தன. திறந்திருந்த ஒரு அண்ணாச்சி கடையில் தீபாவளிக்கு ஊருக்கு போகவில்லையா என்று கேட்டேன். “பொழப்புக்காக மஞ்சப்பையை எடுத்துட்டு என்னைக்கு வந்தமோ அன்னையிலிருந்து தீபாவளியாவது, பொங்கலாவது” சலிப்புடன் சொன்னார்.

அண்ணாச்சியாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் செட்டியார் சாதிதான் தமிழகத்தின் மரபார்ந்த வணிக சாதி. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உழைப்பே இல்லாத சுரண்டல் வட்டிக்கடையின் மூலம் சொத்து சேர்த்து பர்மாத் தேக்கில் அரண்மனை வீடுகள் கட்டி இன்று ப.சிதம்பரமாகவும், எம்.ஏ.எம். சிதம்பரமாகவும், ஸ்பிக் முத்தையாவாகும், அரசுவேலை, தொழில் என்று நடுத்தரவர்க்கமாகவும் இருக்கும் செட்டியார்களுக்கும், புதிய வணிக வர்க்கமாக தலையெடுத்திருக்கும் நாடார்களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.

பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பில் கடைநிலையில் இருந்த நாடார் மக்கள் பொதுவான சீர்திருத்தத்தின் மெதுவான முன்னேற்ற வளர்ச்சியில் மாறியவர்கள். சுயசாதி முன்னேற்றம், கூட்டுதவியின் மூலம் சற்று நிறுவன மயமான சாதியும் கூட. எனினும் பெரும்பாலான நாடார் மக்கள் செட்டியார்களைப் போல முழுதாக வாழ்க்கையின் பங்கைப் பெற்றவர்களல்ல. சிலர் முதலாளிகளாகவும், பெரும் வியாபாரிகளாகவும் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் சிறு கடைகளை வைத்து அதற்குமேல் முன்னேற முடியாத நிலைமையில்தான் காலம் தள்ளுகிறார்கள்.

இந்த சிறு கடை அண்ணாச்சிகளின் வாழ்க்கை அங்காடித்தெரு காட்டும் உக்கிரத்தை விட அவலமானது. அதே போல இந்தக்கடைகளில் பயிற்சிக்காகவும், எதிர்கால பிழைப்புக்காகவும் வரும் இளைஞர்களின் நிலையும் அப்படித்தான். சரவணா ஸ்டோர் அண்ணாச்சியைப் போலவோ இல்லை இன்னும் அதிகமாகவோ இந்த சிறு கடை வியாபாரிகள் தனது பணியாட்களை நடத்துவார்கள். “அப்படித்தான் நானும் கஷ்டப்பட்டு இளமையைத் தொலைத்து, தொழிலைக் கற்று கடைவைத்தேன்” என்று அவர்களால் அதை நியாயப்படுத்தவும் முடியும்.

இன்று இந்த சிறு கடை அண்ணாச்சிகளது வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிட்டது என்றாலும் எல்லாவகை அண்ணாச்சி முதலாளிகளும், வியாபாரிகளும் இப்படி கடினமாக நடந்து கொள்வதை இப்படித்தான் பேசுகிறார்கள். அது ஜனநாயகமற்ற நிலவுடைமைச் சமூகத்தின் அழிவிலிருந்து பொருளாதார ரீதியாக மாறும் சிரமத்தில் வேர் கொண்டிருக்கிறது. வேறு வகையில் சொன்னால் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கையை நேர்மையோடு அமைத்துக் கொள்வதற்கே இவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது என்றால் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளில், தொழிலில் ஜனநாயக உணர்வுகள் இருப்பதற்கு அடிப்படை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

குறிப்பிட்ட காரணங்களினால் பெரும் கைகளாக உருவெடுத்திருக்கும் சரவணா ஸ்டோர், சரவண பவன் போன்ற சென்னையின் பணக்கார நாடார்களோ, அது போல இதயம் நல்லெண்ணெய் போன்ற பணக்கார விருதுநகர் நாடார்களோ, தினத்தந்தி குழும நாடார்களோ ஆரம்பத்தில் இப்படி இருந்தது உண்மையென்றாலும் அவர்களது ஆளுமையில் நிலவுடமை ஆதிக்கத்தின் சாதகங்களை பயன்படுத்திக் கொள்ளும் பொருளாதார நலன் சேர்ந்திருக்கிறது.

அவர்களது உழைப்பு, அதற்கு சமூகம் அளித்த வாய்ப்பு, அதைப் பயன்படுத்தி நிதி ஆதாரம் பெறுதல், ஆளும் வர்க்கங்களுடன் சமரசம் செய்து முன்னேறுதல் மூலம் பணக்காரர்களான இந்த நாடார்கள் தமது நிலையை தங்களது ‘உழைத்து முன்னேறிய’ கதையாக மட்டும் கருதிக் கொள்கிறார்கள். பணம் பெருகப் பெருக இந்தக் கருத்து முன்னிலும் உறுதியாக மாறுகிறது. அதே நேரம் தனது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கிக் கொள்ள இந்த சுய முன்னேற்ற கொசுவத்தி இமேஜ் காரணமாக சுயசாதியின் ஏழைகளை நயவஞ்சகமாக சுரண்டுவதற்கும் பயன்படுகிறது.

________________________________________________

சுயசாதி ஏழைகளை வைத்து தொழில் நடத்தும் முதலாளிகளைப் பற்றி தோழர் கார்க்கி அவரது அங்காடிப் பட விமரிசனத்தில் எழுதியிருக்கிறார். அதைப் படியுங்கள். அங்காடித் தெருவில் வசந்த பாலன் காட்டத் தவறிய முக்கியமான விசயம் இந்த சுயசாதி ஏழைகள் சாதிப்பற்று காரணமாக தமது முதலாளிகளை சுயமரியாதை இன்றி ஏற்கவும் செய்கிறார்கள் என்ற உண்மைதான். அதனால்தான் பொதுவில் சாதிக்காரர்கள் மட்டுமோ அல்லது பெரும்பான்மையாகவோ இருக்கும் தொழில்களில் தொழிற்சங்கம் கட்டுவது கடினம். தொழிலாளி வர்க்க உணர்வை சாதிக்காரணம் சொல்லி அழிப்பது முதலாளிகளுக்கு வசதியென்றால், அதற்கு பலியாகியிருக்கும் தொழிலாளிகளைப் பொறுத்தவரை அது விமரிசக்கப்பட வேண்டியது.

தேவர் சாதி நா.சேதுராமன் நடத்தும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு பெயர் பெற்றது. எல்லா சாதி மக்களும் வந்தாலும் அங்கே வேலை பார்க்கும் பெரும்பாலான சுயசாதி ஊழியர்கள் என்ன பிரச்சினை வந்தாலும் நிர்வாகத்தை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதை ஒரு சொந்த அனுபவத்தோடு ஒரு நண்பர் சொன்னார். அந்த வகையில் இந்த சுயசாதி பற்று சரவணா ஸ்டோர் ஊழியர்களிடமும் இருக்கிறது என்பதை வசந்த பாலன் காட்டியிருக்க வேண்டும். அவர்களது அவலத்தின் முக்கிய அஸ்திவாரமே இங்கேதான் இருக்கிறது. நெல்லையில் நாடார்களாக பார்த்து அதுவும் குடும்பப் பொறுப்புகள் அதிகமிருக்கின்ற இளைஞர்களை பொறுக்கி வரும் விடயத்தைப் போல இதுவும் முக்கியமான ஒன்று.

சரவணா ஸ்டோரில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் அடிமைகளாக வாழும் துயரத்தின் வலிமை இந்த சுயசாதிப் பற்றில்தான் பொதிந்திருக்கிறது. அதே போல அந்தக் கடை அண்ணாச்சியின் எடுபிடிகளது இரக்கமற்ற நடைமுறைகளும் இந்த சுயசாதி பலத்தை வைத்தே ஆடுகிறது. அங்காடித் தெரு இதை விரிவாக பேசியிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் ஆழமாக பயணித்திருக்கும். வில்லனைப் போல இடம் பெற்றிருக்கும் அண்ணாச்சியின் சித்திரிப்பு, ஊழியர்களின் சாதிப்பற்றை விமரிசித்திருந்தால் மட்டுமே முழுமையடைந்திருக்கும்.

இது சரவணா ஸ்டோரோடு முடியவில்லை, இந்தியா முழுமைக்கும் உள்ள பிரச்சினை. தங்களது சொத்து மரபுரிமையால் கிடைத்ததாக எண்ணும் நிலவுடைமைப் பண்ணையாரும், உழைப்பினால் பெற்றதாக கருதும் முதலாளிகளும் பல விசயங்களில் வேறுபட்டிருக்கிறார்கள். பண்ணையாரின் ஆதிக்கத்தை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பும், முதலாளிகளின் ஆதிக்கத்தை முதலாளித்துவத்தின் ‘ஜனநாயக’மும் நியாயப்படுத்துகின்றன. மக்களும் அவற்றை இயற்கையான நீதியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

சில அறிவாளிகள் கருதுவது போல மேற்கத்திய கல்விமுறை, மேலாண்மைப் படிப்புகள் மூலம் முதலாளிகள் ஜனநாயக உணர்வு பெறுவதில்லை. அவர்களுக்கு அதை கற்றுக் கொடுப்பது தொழிலாளிகள்தான். அதனால்தான் தொழிலாளிகளின் எழுச்சியைப் பார்த்து பீதியடைந்த முதலாளித்துவ வர்க்கம் தனது வரலாற்றுப்பாத்திரத்தை கழுவிவிட்டு பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களையும் ஆதரிப்பது என்ற நிலையை எடுத்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானியின் சொந்த மாநிலத்தின் வணிக சாதி மக்கள் கணிசமான அளவில் பங்குதாரர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல.

___________________________________________

அங்காடித் தெருவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். சில மேதைகள் படம் பார்த்த எழுச்சியில் கம்யூனிஸ்டுகள் சரவணா ஸ்டோரில் ஏன் சங்கம் கட்டவில்லை என்று அதிகார தோரணையில் கவலைப்படுகிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் சங்கம் கட்டவேண்டும் என்பதில்லை. அங்காடித் தெருவுக்காக மனிதாபிமானத்தை சிரமப்பட்டு நினைவு கூறுபவர்களும் அதைச் செய்யலாம்.

சரவணா ஸ்டோரில் தொழிற்சங்கம் கட்ட முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சாதிப்பற்றும், சொந்த வாழ்க்கைக்கையின் சிரமங்களும் ஏற்படுத்தும் அடிமைத்தனம். இரண்டு இத்தகைய கடுமுழைப்பு வேலை செய்யும் தொழிலாளிகள், பொழுது போக்கு என்பதற்கே வாய்ப்பற்ற நிலையில் தொழிற்சங்கம் என்ற பணிக்கு சமூக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கும் யதார்த்தம்.

ஆனால் சரவணா ஸ்டோரில் சங்கம் கட்ட முயன்று தோல்வியடைந்ததாக வைத்துக் கூட இதைவிட ஒரு நல்ல படம் எடுத்திருக்க முடியும். இதனால் நாங்கள் சினிமாவை ‘கட்சிப் பிரச்சாரத்திற்காக’ விமரிசிப்பதாக எண்ணும் நண்பர்கள் இங்கே சங்கம் கட்ட முயன்று தோற்றதைத்தான் படமெடுக்கமுடியும் என்ற வாக்கியத்தையும் நினைத்து விட்டு பேசவும்.

தலித்துக்கள், ஏழைகள் போன்ற ஒடுக்கப்படும் பிரிவினர் அவர்களது அடிமைத்தனத்தை மூடியிருக்கும் உலகத்தில் இருந்து கொண்டு மட்டும் விடுதலையை உணர முடியாது. அது அவர்களது உலகிற்கு வெளியிலிருந்தே வருகிறது. கிராமத்தில் இருக்கும் வரையிலும் தீண்டாமையை காலம் காலமாக இருக்கும் ஒரு பழக்கம் என்று சகித்துக் கொள்ளும் ஒரு தலித் அவனது வாழ்க்கைத் தேவைக்காக கிராமத்தை விட்டு வெளியேறலாம் என்ற ஒரு அரசியல் சூழல் உருவாகி நகரத்துக்கு சென்று அங்கே சமத்துவத்தை கண்டு, அனுபவித்து பின்னர்தான் தனது கிராமத்துக்கு திரும்பும் போது அந்த தீண்டாமையை எதிர்க்க வேண்டுமென்ற உணர்வைப் பெறுகிறான்.

அடுப்படியில் அடைபட்டிருக்கும் பெண்கள் கூட ஆண்கள் நிறைந்திருக்கும் சமூகவெளியில் புழங்கும்போதுதான் தமது சமூக அடிமைத்தனத்தை உதறவேண்டுமென்ற விருப்பத்தை அடையமுடியும். இங்கே வலியுறுத்துவது அடிமைகளின் உலகிலோ, இல்லை அடிமைகளின் மூளைகளிலோ அவர்களது விடுதலைக்கான அவா பிறக்க முடியாது. அது வெளியிலிருந்தே வருகிறது.

அங்காடித் தெரு அந்த ‘வெளிப் பார்வையை’க் கொண்டிருக்கவில்லை. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளின் மூலம் ஊழியர்களின் சோகத்தை காட்டியிருப்பதற்குப் பதில் இந்த வெளியுலகோடு அவர்களை பிணைக்கும் வகையில் யோசித்திருந்தால் ‘அமைதியான’ முறையிலேயே அந்த அவலத்தை வியப்பூட்டும் வண்ணம் பார்வையாளர்களுக்கு நெஞ்சில் அறைந்து சொல்லியிருக்கலாம்.

_____________________________________________

எல்லா வகை ‘கருத்துச் சுதந்திரமும்’ உள்ள சென்னை மாநகரில் வாழும் அந்த கடை ஊழியர்கள் தனித்த பாலைவனத்தில் வாழ்வது போல வாழ்கிறார்கள். இது ஒருவகையில் உண்மையென்றாலும் மற்றொரு வகையில் உண்மையல்ல. பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்துக் கேட்கும் வல்லமைக்கு சான்றுகள் பெருகி வரும் காலத்தில் ஒரு சூபர்வைசர் மானாவாரியாக அடிப்பதும், கண்ட இடத்தில் கை வைத்தும் பெண் ஊழியர்களை அவமானப்படுத்துவது எப்படிச் சாத்தியம்? இவை சரவணா ஸ்டோரில் நடந்திருக்கலாம். அதையொத்த பல நிறுவனங்களில் அப்படித்தான் நடக்கிறது. நடக்க வாய்ப்பும் இருக்கிறது. ஆயினும் சமூக யதார்த்தம் என்று வரும்போது இதை நாம் இப்படியே சொல்வது சரியா?

பாலியல் வன்முறைகள் எவ்வளவு நடக்கிறது என்பதை விட அதை எதிர்த்து அவ்வப்போது பெண்கள் காட்டும் எதிர்ப்பும் வளருகிறது என்பதே முக்கியம். சரவணா ஸ்டோரில் எல்லா சூபர்வைசர்களும் அப்படி விகாரத்துடன் நடப்பவர்களாக இருக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்போதும் பொறுமையாக ஏற்குமளவு அந்தப் பெண்கள் அனைவரும் அடிமைகளாக இருக்க முடியாது.

படத்தில் இந்த எதிர்ப்பு பாதிக்கப்பட்ட கனியின் காதலன் என்ற முறையில் லிங்கத்திடம் இருந்தே வருகிறது. காதலித்த குற்றத்திற்காக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதாக இருக்கட்டும், இல்லை பெண் ஊழியர்கள் பாலியல் வக்கிரத்துடன் தண்டிக்கப்படும் சமயங்களாக இருக்கட்டும், இதை எல்லோ ஊழியர்களும் அடிமை போல ஒரு முணுமுணுப்புக் கூட இன்றி பேசா மடந்தைகளாக ஏற்றுக் கொள்வதாகவே படத்தில் வருகிறார்கள். சூபர்வைசரின் தலையில் ஒரு மூட்டையைப் போட்டு அவமானப்படுத்தும் காட்சியும், அதன் பிறகு வரும் பாடலும் இந்த பிரச்சினையை ஒரு காமடி போலத்தான் சித்தரிக்கிறது. பாலியல் கொடுமைகளை எதிர்ப்பதற்கு நகைச்சுவையை கையிலெடுத்திருக்கும் இயக்குநரின் உத்தியை ஏற்க்க முடியவில்லை. முதலாளித்துவத்தின் கொடுமைகளை நகைச்சுவையின் மூலம் காட்டிய சார்லிசாப்ளினின் படங்களில் அவை இறுதியில் வெறும் காமடியாக மட்டும் உணரமுடியாத வண்ணம் அழுத்தமான சோகத்தை உணர வைக்கிறது.

அந்தப் பேரங்கடியில் அண்ணாச்சியின் கருங்காலிகளாக வேலை பார்ப்பவர்கள் ரவுடி போல இருப்பது பிரச்சினையல்ல. இதை ஏற்றுக் கொண்டு வேறு வழியின்றி வாழ வேண்டிய நிலையில் இருந்தாலும் ஊழியர்களின் ‘அமைதி’தான் முக்கியமானது. இடித்துரைக்கப்பட வேண்டியது. தன் காதலியின் மீது கைவைத்தான் என்று சூபர்வைசரை பந்தாடும் லிங்கம், கூடவே அமைதியான அடிமைகளாக இருக்கும் தனது சக ஊழியர்களையும், தன்னையும் வார்த்தைகளால் சுட்டிருக்க வேண்டும். தென்மாவட்டங்களின் உழைக்கும் வர்க்கப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் அந்த பெண்களையும் உள்ளிட்ட இளைஞர்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் பாராமுகமாக போய்விடக்கூடியவர்கள் இல்லை. அவர்களுக்கு தேவை ஒரு நெருப்பு. அதை படத்திலாவது இயக்குநர் பற்ற வைத்திருக்கலாம்.

_____________________________________________________

கடை ஊழியர்களை நாயக நாயகியாக்கியிருப்பதற்குப் பதில் ஒரு சூபர்வைசரை மையமாக்கி அங்காடி தெருவின் கதையைக் காட்டியிருந்தால் சரவணா ஸ்டோரின் எல்லாவகைப் பரிமாணங்களையும் ஒரு இழையில் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பேஜ் 3 படத்தின் இயக்குநர் மது பண்டார்கர் முதலில் அந்தப் படத்தை மேட்டுக்குடியினரது வாகன ஓட்டுநர்களின் பார்வையில் சொல்ல நினைத்து பின்னர் மாற்றிக் கொண்டாராம். அதை ஏன் என்று அவர் விளக்கவில்லை. ஆனால் பேஜ் 3 உலகத்தின் போலித்தனத்தை அந்த உலகில் வாழக்கூடிய ஒரு பெண் பத்திரிகையாளரின் தடுமாற்றங்களிலிருந்து புரிந்து கொள்வதைப் போல ஏழை ஒட்டுநர்களின் பார்வையில் நிச்சயம் வாய்ப்பில்லை.

சூபர்வைசர்கள் சிப்பந்திகளாகவோ இல்லை அண்ணாச்சியின் உறவினர்களாகவோ இருந்து வந்திருக்கலாம். அவர்களுக்கு கீழ்மட்டத்தின் இயக்கமும், முதலாளியின் இயக்கமும், கடையின் வெற்றிக்கான பின்னணியும் தெரியும். நேர்மையானவராகவும், மனிதாபிமானியாகவும் ஆரம்பிக்கும் ஒரு சூபர்வைசர் பின்னர் அமைப்பின் இயங்குதளத்தில் மெல்ல மெல்ல பக்காவான சூபர்வைசராக மாறுகிறார். அதில் நிலை கொள்ள முடியாமல் தோல்வியடையும் ஒருவரது பார்வையில் இந்தப்படம் சொல்லப்பட்டிருந்தால் அது நாமறியாத அந்தப் பேரங்காடியின் முழுமையை உணர்த்தியிருக்கலாம்.

_________________________________________________

ஏழைகளும், நடுத்தர மக்களும் சரவணா ஸ்டோரை ஏன் விரும்புகிறார்கள் என்பதும், அதற்கு அண்ணாச்சி என்ன செய்தார் என்பதையும் அங்காடித் தெரு மருந்துக்கு கூட காட்டவில்லை. மற்ற கடைகளை விட மலிவு என்ற முறையில் மக்களிடம் இருக்கும் அங்கீகாரத்தை கேள்விக்குள்ளாக்காமால் என்ன சோகத்தை ஏற்படுத்த முடியும்? விலை குறைவு, அதிக விற்பனை என்ற சூத்திரத்தை அமல்படுத்தக் கூடிய எல்லா நிறுவனக் கட்டுமானங்களின் மூலம் உலகமெங்கும் ஆதிக்கம் செய்யும் வால்மார்ட்டைப் பற்றி கேள்விப்பட்டிராத ஒரு அண்ணாச்சி தனது கடையில் அதை அனுபவத்தின் மூலம் செய்து காட்டியிருக்கிறார்.

சரவணா ஸ்டோரில் பொருள் வாங்கினால் அதிகம் உழைக்காது என்று பேசும் மேல்தட்டினர் அதிகம் ‘உழைக்கக்’ கூடிய பெரிய நிறுவனங்களின் உடைகளை உயர் விலை கொடுத்து வாங்கினாலும் அவர்கள் அந்த உடைகளை கிழிந்து போகுமளவுக்கு பயன்படுத்தப் போவதில்லை. ஒரு ஆடையை அணிந்த பிறகு பல சுற்று முடிந்த பிறகே அதை மீண்டும் அணிய முடியும் என்ற நிலையில் அவை பழைய துணிகளாக வெளியேறுகிறது. அதுவே பத்து ரூபாய் ரெடிமேடாக தி.நகரின் பாதையோர வியாபாரிகளால் விற்கப்படுகிறது.

சரவணா ஸ்டோரின் விலை மலிவுக்கு என்ன காரணம்? வால்மார்ட்டின் மலிவுக்கான வலியை சீனத் தொழிலாளிகள் சுமப்பது போல ரங்கநாதன் தெருவின் மலிவுக்காக பல சிறு முதலாளிகளும், அவர்களது தொழிலாளிகளும் சுமக்கிறார்கள். எவர்சில்வர் பாத்திரங்களை தயாரிப்பவர்கள், பிளாஸ்டிக் பொருள் சிறு முதலாளிகள், தங்க நகை ஆசாரிகள், பட்டு நெய்யும் நெசவாளிகள் எல்லாரும் சரவணா ஸ்டோருக்காக கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள். அற்ப கூலிக்காக பீஸ் ரேட்டில் நெஞ்செலும்பை இழைத்து பாத்திரங்களை பளபளவைக்கும் அந்த தொழிலாளிதான் படோபடமான அங்காடித் தெருவின் அடிப்படை. சரவணா ஸ்டோர் போன்று பெரிய ஆர்டர்கள் வரும் போது அதை ஏற்கும் சிறு முதலாளிகளும் தமது மார்ஜினை தக்கவைப்பதற்கு தொழிலாளிகளை மேலும் சுரண்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஏக ஏழைகளுக்கு கிடைக்கும் மலிவுக்கு இன்னொரு ஏழையே தியாகம் செய்கிறான்.

சரவணா ஸ்டோருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே அங்கிருக்கும் ஊழியர்களின் மையமான வேலையாக இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர்கள் ‘விற்பனை’ செய்வதற்கான நேரமும், தேவையும் அங்கில்லை. தீபாவளி சமயத்தில் கடை வாசலில் நிற்கும் செல்வரத்தினம் அண்ணாச்சி மக்களை வேறு கடைகளுக்கு போகச்சொல்லி கும்பிட்டவாறே வேண்டுகோள் விடுப்பாராம். பண்டிகைக் காலங்களில் தி.நகரின் மக்கள் கடைகள் அனைத்தும் மக்களை பன்றிக்கூட்டத்தைப் போல நடத்துவார்கள் என்பதை வேலை செய்த தோழர்கள் கூறக் கூட்டிருக்கிறேன். விலை மலிவு என்ற உண்மையில் விற்பவரும், வாங்குபவரும் தங்களது நாகரிகத்தைப் பற்றி கவலைப்படாத யதார்த்தம் சிப்பந்திகளிடம் என்ன உளவியலை ஏற்படுத்தியிருக்கும் என்பது ஒரு சுவராசியமான கேள்வி. கேரள ஓட்டல் தொழிலாளிகளின் நடத்தையில் அலட்சியத்தைக் கண்டுபிடித்த ஜெயமோகன், மனமொப்பி எழுதக்கூடிய வசனங்களுக்கு இந்த சீனில்தான் அதிகம் வாய்ப்பு.

_______________________________________________

கடை சிப்பந்திகளது மின்னல்வேக பணிகள் இடையறாது நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் ஒரு வகை மனித ரோபாக்கள் போலத்தான் இருப்பார்கள். சரவணா ஸ்டோரின் இந்த உடல்மொழி படத்தில் இல்லை. இந்த மனித எந்திர அடிமை வாழ்க்கையை சென்னையின் சேரிகளைச் சேர்ந்த ஒரு உதிரிப்பாட்டாளி ஏற்கமாட்டான். வேறுவழியின்றி அவன் ஏற்றாலும் பல்வேறு வகைகளில் முதலாளிகளுக்கு தொந்தரவு கொடுப்பான். எனவேதான் தென்மாவட்டங்ளிலிருந்து வெள்ளேந்தியாக வரும் ஏழைகள் இதற்குத் தேவைப்படுகிறார்கள். அவ்வகையில் சரவணா ஸ்டோர் மலிவாக விற்க வேண்டுமென்றால் இப்படித்தான் மலிவாக தொழிலாளிகளை நடத்த முடியும். இது பற்றிய கேள்வியை படம் எழுப்பவில்லை.

நாயகி கனியின் கல்லூரி மாணவி போன்ற பாவனைகளை எக்காலத்திலும் அந்தக் கடையில் பார்க்க முடியாது. சமீபத்திய ஆண்டுகளாகத்தான் அங்கே அதிகம் பெண் ஊழியர்களைப் பார்க்கிறேன். முன்னர் அவர்களது எண்ணிக்கை வெகு சொற்பம். ஏழை ஆண்களை விட பெண்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுவது சுலபம் என்பது தமிழகத்தில் சமீப காலமாக நடக்கும் புதிய போக்கு. அந்தக் கோணத்தையும் வசந்த பாலன் உணர்ந்திருக்கவில்லை.

கனியை சற்று அழகாக காட்டவேண்டுமென்பதற்காக மற்ற பெண்களை வேண்டுமென்றே கருப்பைக் கூட்டிக் காண்பித்திருப்பது நல்ல இரசனையல்ல. சொல்லப் போனால் நாயகியே அப்படி கருப்பாக இருந்திருந்தால் பிரச்சினையல்ல. சிப்பந்திகளின் அவலத்தை கருப்பான நாயகியின் மூலம் உணர்த்துவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் நாம் எந்த அவலத்தை பற்றி முதலில் கவலைப்படவேண்டும்?

கடுமுழைப்பில் இருக்கும் இத்தகைய தொழிலாளிகளின் வாழ்வில் சினிமா, கிரிக்கெட் போன்றவைதான் முக்கியமென்றாலும் அது விரும்பிய பொழுதுபோக்கா, இல்லை எளிதில் கிடைக்கும் பொழுதுபோக்கா என்பது பரிசீலனைக்குரியது. விளம்பரத்திற்காக சிநேகா அக்கா வருவதை திருவிழா போல சிப்பந்திகள் கொண்டாடுவது பிரச்சினையல்ல, பொய்யுமல்ல. ஆனால் விளம்பரமே தேவைப்படாத அந்தக் கடைக்கு பல இலட்சம் செலவழித்து விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமும், அந்த செலவின் சிறிய பங்கு கூட தொழிலாளிகளின் வாழ்வை நன்கு மேம்படுத்தியிருக்கும் என்பது ஒரு வசனமாகவோ, காட்சியாகவோ வந்திருக்கவேண்டும்.

இந்த விமரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் எல்லா விசயங்களையும் ஒரு சினிமாவாக எடுக்க முடியுமா, எடுத்தால் அது சினிமாவாக இருக்குமா என்று சிலருக்குத் தோன்றலாம். சினிமா நவீன கலை, இலக்கியங்களின் முன்னேறிய வடிவம். இரண்டு மணி நேரத்தில் இரண்டாம் உலகப் போரையே காட்ட முடியுமென்றால் அதோடு ஒப்பிடும்போது சரவணா ஸடோரின் களமும், காலமும் குறுகியதுதான். அதைக் கண்டுபிடிக்கும் கலையை இயக்குநர் அறிந்திருக்கவில்லை என்பதே பிரச்சினை. அவர் வெறும் விவரங்களின் சேர்க்கையில் ஒரு காதல் கதையை எழுதியிருக்கிறார். மற்றபடி படத்தில் எந்தத் தேவையுமின்றி வரும் ஊர்க்காட்சிகளும், பாடல்களும் நிறைய அடிகளைச் சாப்பிட்டிருக்கின்றன.

தமிழக ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கத்திற்கு சென்னையின் தி.நகர் என்பது எப்போதும் அள்ளிக்கொடுக்கக் கூடிய ஒரு அமுதசுரபி. அதனால் மட்டும்தான் அந்த குறுகிய தெருவில் எல்லா வகை விதிகளையும் மீறி சரவணா ஸ்டோர் போன்ற கடைகள் பிரம்மாண்டமாக எழுந்திருக்கின்றன. தி.மு.கவின் தில்லை நகர் தளபதி ஜே. அன்பழகனைப் போன்றவர்கள் யாரேனும் படத்தில் ஒரு பாத்திரமாக வந்திருக்க வேண்டும். கடைச் சிப்பந்களின் அடிமைத்தனத்தை காப்ப்பாற்றுவதில் அரசே முக்கிய பங்கு வகிக்கிறது.

______________________________________________

இதற்கு மேல் படத்தில் வசனம் எழுதியிருக்கும் ஜெயமோகனைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை என்றாலும் பக்தர்களின் நலனுக்காக சில சாம்பிள்கள். கொத்தனார் வேலை பார்க்கும் தொழிலாளி தனது மகனை பி.இ படிக்க வைக்கப் போவதாக பேசுவது அபத்தத்திலும் அபத்தம். அவரால் தனது மகனுக்கு கலைக் கல்லூரி படிப்பை அதுவும் அரசு கல்லூரியில் மட்டுமே அதிகபட்சம் தரமுடியும். ஆனாலும் நாயகர்களை குறுகிய காலத்தில் வென்று காட்டும் சூப்பர்மேன்களாக கருதும் மனநிலையிலிருந்து ஜெயமோகனும் மாறவில்லை. ஏழைகள் எவரும் நடுத்தர வர்க்கத்தைப் போல கனவுலகில் வாழ்வதில்லை. விருப்பங்கள் இருந்தாலும் அவர்கள் யதார்த்தத்தின் எல்லையை மீறாமல்தான் சிந்திப்பார்கள், பேசுவார்கள்.

மாடிப்படியில் தண்ணீர் குடித்ததைப் போட்டுக் கொடுத்த சக ஊழியனை கோபத்தில் அடிக்கும் லிங்கம், வீட்டில் தான் ஒரு துரும்பு கூட எடுக்காமல் இருக்கும் வண்ணம் தந்தை பாராட்டி வளர்த்திருக்கிறார், இப்போது அவரில்லாத குடும்பத்தின் கஷ்டத்திற்காக இந்த அடிமைத்தனத்தை சகிப்பதாகவும் பேசுவான். இது சூபர்வைசரிடம் அடிபட்ட சோகத்தை அதிகப்படுத்துவதற்காக காட்டப்படும் மிகையான பொய். விவசாயிகள், கிராமப்புறத்தினர் போன்ற உழைக்கும் வர்க்க பின்னணியிலிருந்து வரும் இளைஞர்கள் இயல்பாகவே தமது வீட்டில் பல வேலைகளைச் செய்வார்கள். அதில் கூச்சமெல்லாம் பார்க்க மாட்டார்கள். வீட்டிற்கு வெள்ளையடிப்பதோ, சமயத்தில் சமைப்பதோ, மூட்டைகள் தூக்குவதோ சாதாரணம்.

வறுமையென்றாலும் விசாலமான கிராமப் புறத்தில் வாழும் அவனுக்கு நகர்ப்புறத்து அடைசல் வாழ்க்கையில் ஒன்றுவதுதான் கடினமாக இருக்கும். மற்றபடி பட்டினி, இருப்பதை வைத்து வாழும் பண்பு, அதை நினைத்து எப்போதும் எரிச்சலடையாமல் இருப்பது என்பன போன்ற அவர்களது உளவியலை ஜெயமோகன் அறிந்திருக்கவில்லை. கிராமப்புற ஏழைகள் உழைப்புக்கும், வசதிகள் இல்லாத வாழ்க்கைக்கும் அஞ்சுபவர்களல்ல. ஏதோ அவர்களெல்லாம் வாழ்ந்து கெட்டவர்கள் போல ஜெயமோகன் கருதுகிறார். அல்லது எல்லா ஏழைகளும் விடுதலை பெற ஒரே வழி அவர்களெல்லாம் முதலாளிகளாவாது என்பதே இப்படி சுய புலம்பல் வசனங்களாக வருகிறது.

அதே போல கனி தனது சொந்த வாழ்க்கைத் துயரங்களை அழது கொண்டு கூறுவதும் யதார்த்தமல்ல. உழைக்கும் பெண்கள் யாரும் தமது துயரங்களை வரவிருக்கும் பொற்கால வாழ்க்கையின் கசப்பு நினைவுகளாக கருதுவதில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் யதார்த்தம். சரியாகச் சொன்னால் ஒரு சோகமான புன்னகையோடு, கொஞ்சம் கிண்டலாக கனி சொல்லியிருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். இதிலும் ஜெயமோகனது வாழ்ந்து கெட்டவர்கள் என்ற நடுத்தர வர்க்கத்தின் உளவியலே வேலை செய்கிறது. ஏழைகளைப் பற்றிய பார்வை இயக்குநருக்கே சரியாக இல்லாத போது வசனகர்த்தாவிடம் அதை எதிர்பார்ப்பது அதிகமோ?

“யானை இருக்கிற காட்டில்தான் எறும்பும் இருக்கும்” என்ற பொருளற்ற, காலத்தின் உணர்வற்ற, கவித்துவமான வசனமெல்லாம் நம்மை ஈர்க்கவில்லை. ஆனால் கனியின் தங்கை நாகம்மை பெரிய மனிசியாக மாறிய பின் வரும் காட்சியில் தனது தங்கை லிங்கத்தை யாரென்று அடிக்கடி கேட்டதாக கனி கூறும் போது “நீ என்ன சொன்னாய்” என்று லிங்கம் கேட்பான். ஒரு அழகான மௌனம், புன்னகைக்குப் பிறகு, சிரிச்சேன் என்று கனி கூறுவதுதான் நம்மைக் கவர்ந்த ஒரே இடம். ஆக ஜெயமோகன் எழுதாமல் அமைதியாக அடங்கும் இடம்தான் பிடித்திருக்கிறது என்றாலும் இந்தக் காட்சியின் அழகு அதை சிறப்பாக படமாக்கியிருக்கும் இயக்குநரின் பங்கின்றி மிளிர்ந்திருக்காது என்பதும் உண்மை.

“தன் வீட்டில் சொத்தில்லை, உனது வீட்டில் டவுரி கொடுக்குமளவு வசதியில்லை” என்பதாலேயே இரு குடும்பங்களின் நன்மைக்காக காதல் பற்றி தயக்கம் அடைந்ததாக லிங்கம் பேசுவது யதார்த்தமாக இருந்தாலும் பொருத்தமாக இல்லை. ஏழைகள் ஆண்டைகளைப் பற்றி கேலிதான் பேசுவார்களே தவிர அந்த இடத்தில் தங்களை பொருத்திப் பிரச்சினைகளை பேசமாட்டார்கள். அப்படிப் பேசினாலும் அது விதியை நொந்து கொள்ளும் சுய எள்ளலாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.

ஏழைகள் வாழ்வில் என்னதான் பிரச்சினை இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிச் செல்லும் ஒரு எளிமையான அழகான கனவு அவர்களிடம் உழைப்பு என்ற வர்க்கப் பண்பாய் வெளிப்படுகிறது. அதுதான் அவர்களைத் திரட்டி அந்த ஏழைமையை விரட்ட முடியுமென்ற நடைமுறை நம்பிக்கையை கம்யூனிஸ்ட்டுகளிடம் தோற்றுவித்திருக்கிறது. ஏழ்மையின் அந்த ‘அழகை’ இயக்குநரும், வசனம் எழுதியவரும் புரிந்து கொள்ளவில்லை.

_____________________________________________

இறுதியாக இந்த விமரிசனங்கள் இருந்தாலும் அங்காடித் தெருவை அனைவரும் பார்க்க வேண்டிய படமென்றே கருதுகிறோம். குறைந்த பட்சம் தமிழக வாழ்க்கையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சரவணா ஸ்டோர் என்ற பேரங்காடியின் பின்னே இருக்கும் உழைப்பாளிகளது வாழ்வை காட்ட முனைந்திருப்பது நிச்சயம் வரவேற்க்கப்படவேண்டும். இந்த விமரிசனம் கூட அத்தகைய முயற்சியில் ஒன்றுதான்.

விண்ணைத் தாண்டி வருவாயா – காதலை அவமானப்படுத்தவா…?

காதலை வைத்து தமிழகத்தில் கல்லா கட்டியவர்கள் ஏராளம். காதலிக்க எளிதாக வாய்ப்பில்லாத நாட்டில் காதல் குறித்த கனவுகளும் அதை நனவு போல சித்தரிக்கும் படங்களும் விலைபோகாமல் இருக்குமா என்ன?

கருப்பு வெள்ளைப்படங்களில் காதலன் பட்டப்படிப்பு படித்துவிட்டு படியவாரிய தலையுடன் நாசுக்காக காதலிக்க, காதலியோ இரட்டைத்தலை சடையோடு தளையக்கட்டிய சேலையோடு வெட்கப்பட ….ஓவர் டு 2010

__________________________________________

பொறியில் படிப்பு, டீ ஷர்ட், பைக், சினிமா உதவி இயக்குநர், மாடர்ன் தங்கச்சி, அழகான அம்மாவுடன் சிம்பு காதலுக்கு 22 வயதில் ரெடியாகிறார். ஜெஸ்ஸி , டிசைனர் காட்டன் சேரி, சல்வார், அலைபாயும் முடி, ஐ.டி துறை வேலையுடன் 23 வயதில் த்ரிஷா வருகிறார்.

“காதல் என்பது தானா வரணும், நாம அதை தேடிப் போகக்கூடாது, நம்மள அடிச்சுப் போடணும்” என்று காதலுக்கு இலக்கணம் பேசும் சிம்புவுக்கு அது வந்துவிட்டது. மலையாளப் பெண், கிறித்தவ மதம், தந்தை மறுப்பு என்று த்ரிஷா அவ்வப்போது சிணுங்குகிறார். அதனால் காதலின் கிக் அல்லது அவஸ்தை ஏறுகிறது.

“காதலிக்காக அவனவன் அமெரிக்கா போறான், நாம ஆலப்பிக்கு போகக்கூடாதா” என்று அமெரிக்கா ஏதோ உசிலம்பட்டி போல பேசும் சிம்பு எதிர்பார்க்கமலேயே த்ரிஷா தேவாலயத்தில் பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளைக்கு ஒப்புதல் கொடுக்காமல் புரட்சி செய்கிறார். அவஸ்தையின் அளவு கூடுகிறது.

இதற்குள் மூன்று பாட்டு முடிகிறது. தாமரை எப்போது ஆங்கிலத்தில் பாடல் எழுத ஆரம்பித்தார்? இடைவெளி முடிந்து அமர்ந்தால் மீண்டும் மீண்டும் த்ரிஷா சிணுங்குகிறார். ” டேய் படத்தை எத்தனை வாட்டி ரிவைண்ட் பண்ணி போடுவ” என்று இரசிகர்கள் (தியேட்டர் கமெண்ட்) தாங்க முடியாத அளவில் அந்த அவஸ்தை சவ்வாக இழுக்கப்படுகிறது. நாங்க படம் பார்த்தது A சென்டரில்ல இல்லை!

ஒரு வேளையாக த்ரிஷா அந்த காதல் உலக்கத்திலிருந்து லூசுத்தனமாக (தியேட்டர் கமெண்ட்) மறைந்து போக சிம்பு சினிமா இயக்குநராக ஆகிறார். தனது ஜெஸ்ஸியின் கதையையே படமாக எடுக்கிறார். நிஜத்தில் த்ரிஷா வேறு ஒருவரை திருமணம் செய்ய…. படம் எப்போது முடியுமென்று பொறுமையிழந்த மக்களின் பொறுமலில் கடைசிக் காட்சிகளின் வசனங்கள் சுத்தமாக கேட்கவில்லை. சிம்புவின் படத்தில் அவர்கள் சேருவதுபோல எடுக்கப்பட்டு படம் முடிகிறது. விட்டால் போதுமென்று தியேட்டரிலிருந்து எஸ்கேப்!

___________________________________________

நடுத்தர வர்க்கம் பொருளாதரத்தில் தனது மேல் வர்க்கத்தைப் பார்த்து கனவு கண்டு விட்டு நிஜத்தில் சாதாரண வாழ்க்கையை சலித்துக் கொண்டே வாழும். இந்த வர்க்கத்தின் பொதுப் பண்பு என்னவென்றால் எதையும் பட்டு பட்டுனு முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுக்கும். அவ்வகையில் காதல், வீரம், சோகம் எல்லாம் ஜவ்வுதான்.

நடுத்தர வர்க்கம் துணிந்து காதலித்து, காதலின் பிரச்சினைகளை எதிர் கண்டு போராடி வெல்வது அபூர்வம். இதனால் பிரச்சினைகளை விட்டுவிட்டு காதலைப் பற்றிய மயக்கங்கள், அவஸ்தைகள் அதற்கு தேன்தடவிய பர்கராக தாலாட்டி வருடுகிறது. எங்களோடு படம் பார்த்தவர்கள் இந்த ஜவ்வை எவ்வளவு கேலி செய்ய முடியுமோ அவ்வளவு செய்ததுதான் எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல்.

சாதியும், மதமும், வர்க்கமும் சேர்ந்து திருமணத்தின் குற்றவியல் சட்டமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நாட்டில் அந்த அசலான பிரச்சினையைப் பற்றி பேசினால்தான் அது காதல் படம். வி.தா.வ யில் கிறித்தவம், இந்து மதம் எல்லாம் ஒரு பேச்சுக்கு வந்து சென்றாலும் படத்தின் இதயம், காதலின் இனிய அவஸ்தையையே பழைய முரளி படங்களுக்கு இணையாக அலுப்பூட்டும் விதத்தில் சுவாசிக்கிறது.

ஆனால் அலைகளின் கடற்கரை வாழ்க்கையில் இல்லாத அமெரிக்கா, அமெரிக்கர்கள் காறித்துப்பிய கென்டகி சிக்கன் கடை, ஷாப்பிங் மால்கள், செல்பேசி, எஸ்.எம்.எஸ், பளீர் சாலையில் பைக் பயணம் இவைதான் இது போன்ற காதல் படங்கள் வந்தடைந்திருக்கும் பரிணாமம். பா வரிசைப் படங்களில் நிலப்பிரபுத்துவ மேன்மையிலிருந்த காதல் இன்று முதலாளித்துவ முன்னேற்றங்களில் வந்து நிற்கிறதே அன்றி இந்தியாவின் காதல் வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிராதரமான ஜீவன் இங்கு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. மேக்கப் இல்லாமல் போராட்டத்தில் உயிர்வாழும் உண்மையான தமிழகக் காதலர்களை சந்திக்க வேண்டுமா? 27.02.10 நக்கீரனின் 24 ஆம் பக்கத்தில் பாருங்கள்.

விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல் காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

குழந்தைகள், காதல் இரண்டும் மனித குலத்தை உடல்ரீதியாகவும், அதனால் இனரீதியாகவும் நேசிக்கவைக்கும் அடிப்படைத் தூண்டுகோல்கள். ஆனால் அவை இரண்டும் அதன் வெளியை சுயம், தனிமை, வீடு என்ற தளைகளிலிருந்து பரந்த சமூக வெளிக்கு நகர்த்தும் போக்கில்தான் புடம் போடப்படுகின்றது.

காதல் ஒரு மனிதனை அதீதமான பலத்துடன் வாழ்க்கையை விருப்பமாக அணுகுவதற்கு தயார் செய்கிறது. காதலின் உதவியால் மனிதன் தனது சுற்றத்தை முன்னர் பார்த்திராத வகையில் அன்புடன் அணுகுகிறான். அவனுக்கு இதுகாறும் சலித்துப்போயிருந்த வாழ்க்கைத் தடைகள் இப்போது தாண்டுவதற்கு எளிதான விசயங்களாக மாறுகின்றன. ஆனால் காதலின் இந்த மகத்துவ ஆயுள் மிகவும் குறுகியது என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை.

ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். அதை அமெரிக்க, கேரளா லோகேஷன்களோ, அலங்கார உடைகளோ, ரஹ்மானின் உணர்ச்சியைக் கிளறும் இசையிலோ கண்டு தெளிய முடியாது. சரியாகச் சொல்லப்போனால் தமிழ் சினிமா தற்போது உருவாக்கியிருக்கும் இந்த புதிய சினிமா மொழி அதற்கு தடையாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் ஒரு பரவச உணர்ச்சியாக எண்ணி எண்ணி இன்பமடையலாம்தான். ஆனால் வாழ்க்கை கோரும் சிக்கல் நமக்கு உணர்த்தும் ஒரே ஒரு யதார்த்தம் கூட இந்த இன்பத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்து விடும்.

____________________________________

தமிழ் படங்கள் காதலிக்க கற்றுக்கொடுப்பதில்லை, போராடி வெற்றபெற வேண்டிய காதலை அற்ப உணர்ச்சிகளின் நொறுக்குத்தீனி இரசனையாகத் அவமானப்படுத்தி, திருப்பித் திருப்பிக் காட்டுகிறது. அதனால்தான் காதலர்களது திருமண வாழ்க்கையின் இன்பம் ஒரு சில மாதங்களுக்குள் முடிவுக்கு வருகிறது. இப்படி பத்தாண்டுகளுக்கொரு முறை வரும் தலைமுறைகளிடம் சில காதல் படங்கள் வெற்றியடைகின்றன. ஆனால் சமூகத்தில் இன்னமும் காதல் வெற்றி பெறவில்லை.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் காதல் உணர்ச்சியில் நீங்கள் விழுந்திருப்பது உண்மையானால், மன்னியுங்கள்…….நீங்கள் காதலிப்பதற்கு தகுதியானவரல்ல.

மதராசபட்டினம்: அருங்காட்சியக துணுக்குகளில் ஒரு அரதப் பழசான காதல் கதை !!


பழமையை நினைவு கூறும் வெளிறிப்போன காகிதமாய் இருக்கும் தமிழக வரைபடத்தில் படக்குழுவினரை அறிமுகப்படுத்தும் ஆரம்ப டைட்டில் வரும்போது ஏதோ புதுமை என்ற உணர்வு ஏற்படுகிறது. இறுதிக்காட்சியில் நாயகனும் நாயகியும் சென்டரல் ரயில் நிலையத்தின் முன் இணையும் சலனக்காட்சி வரையோவியமாய் மங்கும் போது நிச்சயமான சலிப்பே மிஞ்சுகிறது.

1945ஆம் ஆண்டு சென்னைக் கவர்னரின் மகளாய் இலண்டனிலிருந்து வந்திறங்கும் நாயகி சென்னையின் சலவைத் தொழிலாளர்கள் குடியிருக்கும் வண்ணாரப்பேட்டையில் வாட்டசாட்டமாய் இருக்கும் பரிதியை (ஆர்யா) தற்செயலாய் சந்தித்து பின் காதல் வயப்படுகிறாள். அவளைச் சுற்றியிருக்கும் வெள்ளையர்கள் இரக்கமற்றவர்களாக இருக்கும் போது அவள் மட்டும் மனிதாபிமானியாய் இருக்கிறாள். இருந்தாக வேண்டும்.

47இல் வெள்ளையர்கள் வெளியேறும் தருணத்தில் தன் காதல் நிறைவேறாமல் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு இலண்டன் திரும்புகிறாள். அறுபது வருடம் கழித்து ஆர்யாவின் குடும்பத் தாலியை எடுத்துக் கொண்டு பேத்தியுடன் சென்னை வருகிறாள். சலவைத் தொழிலாளியான பரிதி ஏழைகளுக்கு உதவும் நிறுவனங்களை உருவாக்கிவிட்டு இறந்து போகிறானாம். அவனது சமாதியில் கண்ணீர் விடும் அந்த வெள்ளைக்காரப் பாட்டியின் இளைமைக்கால நினைவுடன் படம் முடிகிறது.

இலண்டனில் அந்தப்பாட்டிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நேரத்தில் அவள் சென்னையில் ஒரு கடமை இருக்கிறதென்று கிளம்புவதும், சென்னையில் பேத்தியுடன் பரிதியைத் தேடி அலைவதும் உணர்ச்சி என்ற வகையில் டைட்டானிக்கை நினைவுபடுத்துகிறது. பின்னணி இசையும் டைட்டானிக்கின் தீம் மீயுசிக்கை கண்டிப்பாய் மீட்டு வருகிறது.

டோபிகனால் கிராமம், மழைப்பாட்டு, வெள்ளை அதிகாரியுடன் மல்யுத்தம் எல்லாம் லகானை நினைவுபடுத்துகிறது. மல்யுத்தத்தில் அந்தக்கால கட்டத்தில் இல்லாத காலடி பல்டிகள் “அன்டிஸ்பியூட்டட்” படக் காட்சிகளை சார்ந்திருக்கிறது. அப்போகலிப்டோ படத்தில் அம்புகள் விரட்ட வளைந்து வளைந்து ஓடுவது போல இங்கு ஆர்யா துப்பாக்கி தோட்டக்கள் விரட்ட அப்படி ஓடி தப்பிக்கிறார். அந்த வெள்ளைக்கார நாயகியின் பாட்டுக்களும், காட்சிகளும் கூட லகானில் பார்த்தவைதான். மணிக்கூண்டு சண்டைகள் ஜாக்கிசான் படத்தில் வந்தது போலவே இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் விஜய் இப்படி பல படங்களைப்பார்த்து அதன் பாதிப்பில் ஒரு கதையை எழுதினார் என்று சொல்லவில்லை. அதே சமயம் படத்தின் கருவும், உணர்ச்சியும் உண்மையாகவோ, இயல்பாகவோ இல்லை என்பாதல் ஒரு வித செயற்கைத் தன்மையைத்தான் வலிந்து உணர்கிறோம். அதனாலேயே எல்லாக் காட்சிகளும் முன்னர் கூறிய படங்களை நினைவு படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஏன்?

படத்தில் நாற்பதுகளின் சென்னைக் காட்சிகளை காட்டுவதற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். அந்தக்கால மவுண்ட்ரோடு, சென்டரல் நிலையம், ட்ராம் வண்டிகள், நீராவி என்ஜின் ரயில்கள், அமிர்தாஞ்சன், லக்ஸ், கோல்கேட் விளம்பரங்கள், பழைய கார்கள் எல்லாம் சரிதான். இவையனைத்தும் கழுவி துடைத்த புதுமைப் பொருட்களாகத்தான் இரசிகனால் உணரப்படுகின்றன. இந்த அருங்காட்சியக உணர்வை வரவழைப்பதில் மிகவும் சராசரியான கதை முக்கிய பங்காற்றுகிறது.

காதல் கதையின் வரலாற்றுப் பின்புலத்தில் சுதந்திரப் போராட்டக் காட்சிகள் இருக்கின்றன. அவையும் கூட டெக்ஸ்ட்புக் வரலாற்றின் தரத்தில் கூட இல்லை. இறுதிக் காட்சியில் இந்தியா சுதந்திரம் வாங்கும் தருணத்தில் இரசிகன் காதலர்கள் எப்படியாவது சேரமாட்டார்களா என்று ஏங்குகிறான்.

கால்ப் மைதானத்திற்காக டோபிகனாலை அப்புறப்படுத்தும் அநீதியை எதிர்த்து பரிதியும் அவனது நண்பர்களும் வெள்ளையர்களைத் தாக்குவது கூட காதலின் நியாயத்திற்காகவே வலிந்து சேர்க்கப்பட்டிருக்கிறது. வெள்ளை அதிகாரிகள் காலனிய ஆட்சியினாலும், காதலுக்கு எதிரிகள் என்ற முறையிலும் வில்லன்கள். வண்ணாரப் பேட்டையின் குஸ்தி வீரனாக நாயகன். தமிழ் வெட்கத்தை என்னவென்றே அறிந்திராத வெள்ளையினப் பெண் நாயகி. எனில் இங்கே வரலாற்றுக்கு தேவையே இல்லை என்றாகி விடுகிறது.

இலண்டனில் இருந்து வந்த இளம்பெண் வண்ணாரப்பேட்டை நாயகனை காதலிப்பதான இயக்குநரின் துணிச்சல் அந்தக்கால எம்.ஜி.ஆர் ஃபார்முலாபடி இரசிகன் ஏற்றுக் கொள்வான் என்பதில்தான் படைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் சுண்டினால் சிவக்கும் வெள்ளை நிறப் பெண்ணை மாநிற இரசிகர்களான தமிழ் ஆண்கள் ஒன்றிப்பார்ப்பார்கள். கூடவே வெள்ளைப் பெண்ணை அடைய வெள்ளை ஆண்களை வீழ்த்தும் தமிழ் நாயகனது ஹீரோயிசத்திலும் இரசிகன் ஒன்றுவான் என்பது இயக்குநரின் மலிவான நம்பிக்கை. அது வீண்போகாமல் கூட இருக்கலாம்.

ஆனால் இப்படி ஒரு கதையின் தேவை என்ன? வழக்கமான தமிழ் ஃபார்முலாவையே ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் எடுக்கலாம் என்பதைத் தவிர இயக்குநர் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. அதனால்தான் இங்கு வரலாறு என்பது அருங்காட்சியக அலங்காரங்களாய் உறைந்து போகிறது. இந்திய வரலாற்றின் கொந்தளிப்பான அந்த காலகட்டத்தின் வரலாற்று உணர்ச்சியை இயக்குநர் தன்னளவில் கற்றிருக்கவில்லை.

வெள்ளையர்களை வில்லன்களாக காட்டியிருப்பது கூட காதலின் நியாயத்தில்தான் நிற்கிறதே அன்றி காலனிய ஆதிக்கத்தில் அல்ல. காலனியாதிக்க காட்சிகளெல்லாம் சமூக தளத்திலல்லாமல் காதல் தளத்தில் நின்று கொண்டு பக்கவாத்தியமாய் அதுவும் அபஸ்வரமாய் துருத்துகின்றன. நாயகி கோரியபடி தமிழ்ப் பண்பாட்டை நாயகன் அறிமுகப்படுத்தும் பாடலில் பாம்பாட்டி, கழைக்கூத்தாடி, மசூதி செல்லும் இசுலாமியர்கள், ஐயர், இவர்கள் சர்வமத சகோதரத்துவமாக கட்டிப்பிடித்தல், யானை ஆசிர்வாதம், கடற்கரை, மாமல்லபுரம் என்று வரும் காட்சியிலேயே பண்பாடு என்றால் என்னவென்று இயக்குநர் எழுதியிருப்பது பளிச்சென்று தெரிகிறது. உண்மையில் இந்தப் பண்பாடு அற்ற பார்வை மேலோட்டமான, ஆதிக்கமான வெள்ளையறிவினால் முன்முடிவோடு கருதப்பட்ட சலிப்பூட்டும் பார்வை. ஆக வெள்ளையறிவினால் புனையப்படும் அறிவு தமிழ் இயக்குநரின் வழியே பிதுங்குகிறது என்றால் இன்னும் நமது படைப்பாளிகள் காலனிய அடிமைச் சிந்தனையிலிருந்து விடுதலையாகவில்லை என்றுதானே பொருள்?

1945களில் தென்னிந்திய வரலாறு என்பது திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம், விடுதலை இயக்கம் என்று அரசியல், சமூக, பொருளாதாரத்துறைகள் மிகவும் ஊக்கத்துடன் இயங்கிய நேரம். தெலுங்கானா இயக்கம், கீழத்தஞ்சையில் கம்யூனிச இயக்கம், பெரியார் செயலூக்கத்துடன் இயங்கிய காலம், காங்கிரசின் வழியாக ஆதிக்கத்தை தொடர நினைத்த மிட்டா மிராசுதார்கள், பத்திரிகைகள் அரசியல் அமைப்பாளனாய் வெளிவந்த தருணம், இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் புதுமைப்பித்தன் என்று எவ்வளவோ இருக்கிறது. இவை எதுவும் இயக்குநர் அறிந்திருக்கவில்லை அல்லது அவரது கதைக்கு தேவைப்படவில்லை.

அப்படி என்றால் இந்த அந்தக்கால காதல் கதைக்கு என்ன முக்கியத்துவம்? ஒரு வராலற்றுப் பின்புலத்தில் எழுதப்படும் கதை அந்த வரலாற்றுக்கு உண்மையாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அந்த வரலாற்றுணர்வு சமூகத்தை பாதித்திருக்கும் இயங்கியலை அறிந்திருக்க வேண்டும். இருந்திருந்தால் இதே காதல் கதையை இப்படியான மொக்கைப் பார்வையில் தந்திருக்க முடியாது.

வரலாறு எனும் மேடையில் ஒரு கதையை எழுதுவென்பது உண்மையில் சிரமமான ஆனால் மிகவும் விருப்பமான விசயம். இயக்குநர் இந்த இரண்டையும் ஒதுக்கிவிட்டு, தமிழ் சினிமா ஃபார்முலாவில் வரலாற்றை வெறும் தோற்றக் காட்சிகளாய் பயன்படுத்தி ஒரு கதை எழுதியிருக்கிறார். ஆதாலால் படம் வளர வளர நாமும் வரலாற்றுணர்வை இழந்து, வெரைட்டியான காட்சிகளில் வரும் காதல் கதையை ஒரு மாற்றத்திற்காக இரசிக்க நினைத்து பின்னர் அதுவும் இல்லாமல் இறுதியில் வெற்றுணர்வை மட்டுமே அடைகிறோம்.

தமிழ் படைப்பாளிகள் அநேகர் தமது படைப்புகளில் குறிப்பிட்ட பாத்திரங்களின் வழியேதான் சமூகத்தை பார்க்கிறார்கள். ஆனால் ஒரு நல்ல தேர்ந்த படைப்பாளி சமூக இயக்கத்தின் சூட்சுமத்தை அறிந்து கொண்டு அதன் வழியில் பாத்திரங்களை செதுக்க வேண்டும். மதராசபட்டினத்தில் அந்த சூட்சுமம் இல்லை என்பதால் நாம் நிறைவான படைப்புணர்வு தரும் அனுபவத்தை பெறமுடிவதில்லை.

பிறகு?

ஆர்யா என்ற நடிகர் ஒரு நட்சத்திரமானது நிச்சயம் அதிர்ஷடம்தான். எல்லா தருணங்களிலும் அவரது முகம் ஒரே உணர்ச்சியைத்தான் வெளிப்படுத்துகிறது. நாயகி பரவாயில்லை, வெள்ளைக்காரப் பெண்ணாக இருந்தாலும் தமிழ் வெட்கத்தைக் காட்டி காதல் வயப்படுவதை செய்திருக்கிறார். கலை இயக்குநர் எல்லாவற்றையும் புதிதாக எழுப்பியிருக்கிறார். அதில் குறிப்பிட்ட காலகட்டத்தின் தேய்மானம் எந்த பொருட்களிலும் இல்லை. பாலிஷ் போடப்பட்ட அருங்காட்சியகத்தை படம் முழுக்க பார்க்கிறோம். மேலும் படத்தின் கருவுக்கு இதுதான் தேவைப்பட்டது என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

இசையும், பாடல்களும், உரையாடல்களும் சலித்துப்போன வழமையான உணர்ச்சிகளையே மீட்டுவருகிறது. இயக்குநர் நேட்டிவிட்டிக்காக நிறைய மெனக்கெட்டு, தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்துதான் இந்தப்படத்தை போராடி எடுத்திருக்கவேண்டும். எனினும் அந்த போராட்டம் எதையும் நமக்கு அனுபவமாக வழங்கிடவில்லை என்பதால் ஆயாசம்தான் மிஞ்சுகிறது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் சினிமா எப்போதும், இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வாழ்க்கைக்கு அருகாமையில் வரப்போவதில்லை என்ற நீதியை மதராசபட்டினமும் நிரூபிக்கிறது.
கஷ்டப்பட்டு பலரது உழைப்பில் எடுக்கப்படும் இத்தகைய படங்களை நோகாமல் விமரிசிப்பதுதான் வினவின் நோக்கம் என்று சிலர் இப்போதும் மறுமொழி இடக்கூடும். ஒருவர் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பது முக்கியமல்ல, அந்த உழைப்பின் சமூக விளைவு என்ன என்பதே நம் கரிசனத்திற்குரியது.

திருடன் கூட ஜாலியாக திருடுவதில்லை. கஷ்டப்பட்டு திட்டம் போட்டு, நோட்டம் பார்த்து, ரிஸ்க் எடுத்துதான் திருடுகிறான். என்னதான் ஊழல் செய்தாலும் அம்பானி சகோதரர்கள் தமது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை தக்கவைக்கவும், விரிவு படுத்தவும் கஷ்டப்பட்டுத்தான் உழைக்கிறார்கள். என்னதான் குடும்ப ஆட்சிக்காக பாடுபட்டாலும் கருணாநிதி கூட கஷ்டப்பட்டுத்தான் உழைக்கிறார். ஆப்கானில் உள்ள அமெரிக்க இராணுவம் கூட சுடும் பாலைவனத்தில் கஷ்டப்ப்டடுத்தான் மக்களைக் கொல்கிறது. இவர்கள் அளவு நாம் கஷ்டப்படுவதில்லை என்பது உண்மைதான்.

ஆனாலும் நாம் இவர்களை ஆதரிப்பதில்லையே?

Monday, August 2, 2010

அளவுக்கு மீறினால்...

இப்போதைய பரபரப்பான காலத்தில் குண்டூசி விற்கக்கூட அட்ராக்டிவான விளம்பரம் தேவைப்படுகிறது. டிவி, பத்திரிக்கை, ஹோர்டிங் போர்டுகள், ஆஃபர், ஸ்டால்கள், ஸ்பான்சர் என பல வகையில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இது நுகர்வோர் பொருட்களுக்கு மட்டும்தான் என்ற நிலை மாறி அனைத்து துறைகளும் தத்தம் இருப்பைக் காட்டிக்கொள்ள விளம்பரம் தர ஆரம்பித்துவிட்டன.

தினசரிகளிலும் டிவி சேனல்களிலும் இப்போது நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்களை விட சினிமா படங்களுக்கான விளம்பரங்கள் தான் ஜாஸ்தி. விளம்பரங்கள் மட்டுமில்லாமல் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை க்ரியேட் பண்ண/கூடச் செய்ய டாக் ஷோ, கெஸ்ட் ஷோ என நிறைய ப்ரோமோ நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். இந்த ப்ரோமோ நிகழ்ச்சிகளின் நோக்கமான க்ரியேட்டிங்க் எக்ஸ்பெக்டேஷன் சில/பல சமயங்களில் எதிர்மறையாய் போய்விடுகிறது.

முதலில் டிவி விளம்பரங்களுக்கு வருவோம். சன் டிவியை இந்த ஆட்டத்தில் சேர்த்துக்க வேண்டாம். சன் குழும சேனல்களில் சோப் விளம்பரத்தைவிட அதிக தடவை விஜய் தான் வருகிறார். திரும்ப திரும்ப காட்டும்போது அடப்போங்கடா என்ற ஃபீலிங் வருகிறது. இது இல்லாமல் கலைஞர், விஜய், ஜெயா போன்ற சேனல்களில் ஒளிபரப்பப்படும் ட்ரெய்லர்கள் அடுத்த ரகம். இதில் சில ட்ரெய்லர்களைப் பார்த்தாலே படத்தை பார்க்கும் ஆர்வம் ஏற்படும். சில சமயங்களில் ட்ரெய்லரே இப்படின்னா படம் எப்புடி இருக்கும் என்ற பீதி ஏற்படும்.

அடுத்து ரிலீசான படங்களிலிருந்து சில சுவாரஸ்யமான சீன்கள் போடுவார்கள். சில சீன்கள் நிஜமாவே சூப்பராக இருக்கும். சில சீன்களை பார்த்தால் அஞ்சு நிமிஷ சீனையே பார்க்க முடியலயே. இரண்டரை மணி நேரம் படம் எப்படி பார்ப்பது என்ற பயம் ஏற்படும். பாடல்கள் ஒளிபரப்பப்படுவது இன்னொரு வகையான விளம்பரம். இது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட். இன்பாஃக்ட் விஜய் படங்கள் கொஞ்சம் ஓடுவது இதனால்தான்.

இப்போ தான் இருக்கு பாடாவதி பிரச்சனை. ஒரு படம் ரிலீசாவதற்கு முன்னால் அதில் நடித்த நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என அத்தனை பேரையும் சோபாவில் உட்கார வைத்தோ அல்லது முளைப்பாரி சுற்றி கும்மியடிப்பதுபோல் செமி சர்க்கிளாக நிற்க வைத்தோ பேட்டி/கல்ந்துரையாடல் என்ற பெயரில் உளறவிடுவது. அந்த மாதிரி நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட நடிகர்/நடிகை இந்தப் படத்துக்காக உசிர கொடுத்து நடிச்சோம். எட்டாவது வார்டுல ஷூட்டிங் நடந்தபோது ஒரு பெரிய கொசு கடிச்சுது. அந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பார்கள். பேட்டி எடுக்குற பிரகஸ்பதி கண்ண சிமிட்டிக்கிட்டே ஹீரோயின் கிட்ட ஹீரோவப் பத்தியும், ஹீரோகிட்ட ஹீரோயினோட பெர்பாஃமன்ஸ் பத்தியும் கேணத்தனமா ஏதாவது கேட்டு வைக்கும். முக்கியமா ஹீரோக்கோ இல்ல ஹீரோயினுக்கோ ஏதாவது டான்ஸ் சீக்வென்ஸ் ஷூட் பண்னும்போது கண்டிப்பா 108 டிகிரி ஜுரம் இருந்திருக்கும். அதையும் தாண்டி ஆடிருப்பாங்க. கேக்கறவனெல்லாரும் கேணைங்க தான்.

அடுத்ததா நம்ம கிரியேட்டிவ் மண்டை வருவாரு. பேட்டி எடுக்கறவங்க தன் இண்டலிஜன்ஸ் காமிக்க இது அந்தப் படத்தோட காப்பியாம்பாங்க. இவரும் சிரிச்சுக்கிட்டே அப்படி ஒரு படம் வந்துதாம்பாரு (முடிஞ்சா இந்த சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்). அதெப்பெடி எல்லா டைரக்டர்களும் சொல்லி வச்சா மாதிரி "வித்யாசமான சப்ஜெக்ட்"ன்னு சொல்றாங்கன்னு தெரியல. ஹீரோ செட்டுல காமன் மேன் மாதிரி நடந்துகிட்டார். டீ தான் சாப்பிட்டார். ரிக்ஷாவுல தான் வந்தார்ன்னு ஹீரோக்கு ஜைன் ஜக் போடுவாங்க (அசல் வரட்டும். சரணுக்கு இருக்கு). இதெல்லாம் செஞ்சாரே கொஞ்சமாச்சும் நடிச்சாரான்னு கேளுங்க. ம்ஹூம். ஏதாவது எக்குத்தப்பா சொன்னா அடுத்த படத்துக்கு கால்ஷீட் கிடைக்காதுல்ல.

படத்திற்கு பிரமாண்டம் அவசியம் தான். சில சமயங்களில் மட்டும். பெரிய மாளிகை போன்ற செட்டோ, வெளிநாட்டு பாடலோ பார்க்கும்போது மக்கள் தங்கள் ஏக்கங்களை தீர்த்துக் கொள்வார்கள். அதுவும் அவசியமென்றால் செய்யலாம். அதை விடுத்து ஹீரோ போட்ட கண்ணாடி 4 கோடி, ஷூவுக்கு 3 கோடி என்றெல்லாம் செலவு செய்வது எதற்கு (செல்வா ஆயிரத்தில் ஒருவன் ஆப்பு வச்சிருச்சு. அடுத்த படத்துலயாவது பார்த்து பண்ணுங்க)? சன் ரைஸ் காமிக்கிறதுக்கு ரொம்ப மெனெக்கெட்டோம். அதுக்கே ஒரு 4 கோடி போச்சும்பார்கள். எவன் அப்பன் வூட்டு காசோதானே?

இந்த அலப்பறை பண்றானுவளேன்னு தியேட்டர் போனா கிர்ர்ர்ர்ர். ஹீரோ சுழட்டி சுழட்டி அடிக்கும்போதே நமக்கும் தலைவலி வந்துருது. இவ்ளோ கோவம் ஏன்னு யோசிப்பீங்கதானே. போன வாரம் ஒரு கருமத்த பார்த்து தொலச்சேன். இத்தனைக்கும் பாதி படம் கூட பார்க்கல. ரெண்டு வருஷம் எடுக்க இந்தப் படத்துல என்ன இருக்கு (சீயான் இப்படியே தேடிப்போய் மாட்டுங்க. விளங்கிரும்)? ஹீரோயின் ஒரு பாட்டுல போட்ட செருப்பு 3 கோடியாமாம். படதுவக்க விழா அழைப்பிதழ் 15,000 ரூபாய். படத்த ஒழுங்கா எடுங்கப்பு. கிராமத்தயெல்லாம் அப்புறம் தத்து எடுக்கலாம்.

மதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்..

மதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்..
டிஸ்கி : மதராசபட்டிணம் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகையில் டைரக்டர் தமிழ் சினிமாக்களின் இலக்கணங்களை மீறாமல் கொஞ்சம் ரொம்பவே இழுத்துவிட்டார். துரையம்மாள் ட்ரஸ்டை தேடிப் போகும்போதே இந்தக் கதையை இன்ன டைரக்டர் எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என யோசித்துப் பார்த்தேன். வீட்டிற்கு வந்து டெவலப் செய்தது. நகைச்சுவைக்காகவே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.

என் இனிய தமிழ் மக்களே...

பூக்கள் பூக்கும் தருணம் பாடலின் போது ஆர்யா-ஏமி அமர்ந்திருக்கும் போட்டை சுற்றி பத்து படகுகளில் வெள்ளை உடையில் தேவதைகள் (என்ற பெயரில்) சிலர் ஆடுவார்கள். அந்த மணிக்கூண்டில் நடக்கும் சண்டையின்போது ஆர்யா அடிபட்டு மயங்கிவிடுவார். ஏமி தன் மானத்தை காப்பாற்றிக்கொள்ள வில்லனை மேலிருந்து கீழே தள்ளி கொன்றுவிடுவார். கடமை தவறாத கவர்னர், மகள் என்றும் பாராமல் அவரை அரெஸ்ட் செய்து லண்டன் ஜெயிலில் அடைத்துவிடுவார் (அதான் இந்தியாவுக்கு சுதந்திரம் குடுத்துட்டாங்களே. Moreover ஏமி லண்டன் சிட்டிசனாச்சே. லாஜிக். லாஜிக்). ஆயுள் தண்டனை முடிந்து ஏமி இந்தியாவுக்கு வருவார். அவர் ஏர்போர்டில் இறங்கியதும் இழுத்துக்கொண்டிருக்கும் ஆர்யா இன்னும் ஆஸ்மா ட்ரபிள் வந்தவர் மாதிரி இன்னும் இழுத்து இழுத்து மூச்சுவிடுவார். அப்படியே பாட்டியக் காமிக்கிறோம். நவரசத்தையும் மூஞ்சில காமிப்பாங்க. கண்டிப்பா கண்ணு துடிக்கும். ஆர்யா இருக்கிற இடத்துக்கு வந்து பார்த்து அவர தொடுவாங்க. அத்தனை காலமா கோத்ரேஜ் பீரோல் பூட்டி வச்சிருந்த ஆர்யாவோட உசிர் படக்குன்னு போய்டும் (இதயா டாவடிச்சோம் என்ற அதிர்ச்சி தான் உண்மையான காரணமாயிருக்கும்). ஆர்யாவோட கால்மாட்டுல உக்காந்திருக்கிற பாட்டியோட தலை தொபுக்கட்டீர்ன்னு தொங்கிரும்.

எந்த சாரே...

ஆர்யாவை தண்ணியில் தள்ளி்விட்டுவிட்டு போகும் ஏமிக்கு லண்டனில் வேறொருவோடு கல்யாணமாகிறது. ஏமியின் காதல் கதையை தெரிந்து கொள்ளும் அந்த வெள்ளக்கார துரை ஏமியை அழைத்துக்கொண்டு இந்தியா வருகிறார். படாதபாடுபட்டு ஆர்யாவை கண்டுபிடித்து ஏமியை ஏற்றுக்கொள்ள சொல்கிறார். அதற்கு ஆர்யா “என்னுடைய காதலி உங்கள் மனைவி ஆகலாம். ஆனால் உங்க மனைவி என்னுடையா காதலி ஆக முடியாது துரை. எங்க நீங்க போட்ட அந்த மோதிரத்த கழட்ட சொல்லுங்க பார்ப்போம்”. ஏமி கூலாக மோதிரத்த கழட்டிக்கொடுத்துவிட்டு “நீ சொன்ன டயலாக் எல்லாம் தமிழ்நாட்டு கல்ச்சருக்கு தான் பொருந்தும். ஐ’ம் ஃப்ரம் லண்டன். Not applicable to me".

தங்கச்ச்ச்ச்ச்சீஈஈஈஈஈஈ...

செல்வி பிறந்தவுடனேயே அவர் அம்மா இறந்துவிட, தாய்க்கு தாயாக இருந்து செல்வியை கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார் ஆர்யா (உங்களுக்கு அபாரமான மனதைரியம் இருந்தால் ஆர்யாவை நீக்கிவிட்டு அவரை கற்பனை செய்து கொள்ளவும்). அண்ணனுக்கு பயந்த, அண்ணன் மீது அளவில்லா பாசம் கொண்ட தங்கையாக வலம் வருகிறார் செல்வி. அதே நேரம் அவருக்கு ஒரு (நல்ல) வெள்ளைக்கார துரையுடன் காதல் வளர்கிறது. இது தெரியாமல் அண்ணன் வேறொருவருக்கு தங்கையை கல்யாணம் செய்து தருவதாக வாக்கு கொடுத்துவிடுகிறார். இதுல சைட் ட்ராக்கா அவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஏமி. அவர் காலடி மண்ணை விபூதியாக பூசிக்கொள்கிறார். அவருக்காக தோபிகானாவில் வந்து துணி தோய்க்கிறார். கழுதை மேய்க்கிறார். அவரின் பார்வை கூட ஏமி மீது படாது. அப்படிப்பட்ட பண்பாளர் அவர். தங்கையின் காதல் விஷயம் தெரிந்ததும் ஒரு நீண்ண்ண்ண்ண்ட (டயலாக்) போராட்டமே நடக்கிறது வீட்டில். கடைசியில் தங்கையின் ஆசைதான் பெரிது என நினைத்து காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார். ஏமியை இழுத்துக்கொண்டு போகவரும் வில்லனை (பேசியே) கொல்கிறார். இவர் ஏற்கனவே பேசிவைத்திருந்த பையன் வீட்டார் நிச்சயம் பண்ண வர இவர் மறுத்து நிலைமையை விளக்க, அவர்கள் வாக்கு தவறிட்டியே என சொல்ல, அந்த வார்த்தையை கேட்ட அடுத்த நொடி சலவைக்கல் மீது விழுந்து உயிர்விடுகிறார் நம்ம கவரிமான் பரம்பரை ஹீரோ.

லாலாலா லல லாலா...

ஆர்யா-ஏமி காதல் விவகாரம் கவர்னருக்கு தெரிய வருகிறது. ஆர்யாவிடம் கவர்னர் ஸ்டேட்டசை சுட்டிக் காட்டி பெண் தர மறுக்கிறார். வெகுண்டெழும் ஆர்யா வொர்க் பெர்மிட்டில் லண்டன் சென்று தினக்கூலியாக வேலைக்கு சேர்கிறார். ஒரே பாட்டில் பெரிய பணக்காரராகி ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பார்ட்னராக முன்னேறுகிறார். யூகே குடியுரிமைப் பெற்று தாயகம் திரும்பி ஏமியை கரம்பிடிக்கிறார்.

அழுக்க அடிச்சி பாத்திருக்கியா..

சட்டைய சர்ஃப் எக்ஸல்ல தோச்சிருப்ப. ரின் மேட்டிக்ல தோச்சிருப்ப. ஏன் அரசன் சோப்ல கூட தோச்சிருப்ப. ஆனா சலவக்கல்ல தோச்சிருக்கியா. சோப்பே இல்லாம தோச்சிருக்கியா. ஓங்கி அடிச்சா நாலு மூட்டை துணியோட அழுக்கும் அடையாளமில்லாம போய்டும்டா பார்க்கிறியா. பார்க்கிறியா. பார்றா. தொம். தொம். தொம் என ஆர்யா அடிக்க பின்னாடி ட்ராம் ஒன்று வெடித்து பனை மர அளவு பறக்கிறது. ஏமிக்கு புடைவக்கு பதிலாக பாவாடை தாவணி குடுத்து ஊட்டி மலையில் ஒரு டூயட் உண்டு.

ஏமியின் கையெழுத்து...

”I've some unfinished business in India" என சொல்லிவிட்டு ஒரு தோள்பையோடு ஏர்போர்டில் இறங்குகிறார் ஏமி (பாட்டி). விமானத்திலிருந்து இறங்கி இமி்க்ரேஷனைக் கடக்கும்போது “memories coming" பாட்டு. செக்யூரிட்டு கார்டுடனான காதலுக்கு சாட்சியா அவரிடமிருந்து அடித்த மெட்டல் டிடெக்டரை (1947 மாடல்) தொட்டுப் பார்த்துக்கொண்டே வெளியே வருகி்றார். ட்ராமிலேறியவுடன் மீண்டும் அதே பாடல். ட்ராமில் சுட்ட மணியை எடுத்துப் பார்த்துக்கொள்கிறார். இப்போது கண்டக்டராய் இருக்கும் ஆளின் பெயர் துரை என்பதை அறிந்தவுடன் பஸ் கம்பியில் சாய்ந்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுகிறார். ரெஸ்ட் ஆஃப் த ஸ்டோரி ஆர்யாவை தேடுவது.

ரீ-மேக்...

தமிழ்ல ஆர்யா-ஏமி நடிச்சு சூப்பர் ஹிட்டான கதைய மட்டும் எடுத்துகிட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி மாத்தியிருக்கோம். நடிகர் நடிகைகள் எல்லாரும் தமிழ்ப்படத்துல
நடிச்சவங்கதான். காஸ்ட்யூம், வசனங்கள், லொகேஷன் எல்லாம் தமிழ்படத்துல வந்த மாதிரிதான். இல்ல இல்ல. அப்படியே காப்பியெல்லாம் அடிக்கல. ரொம்பக் கஷ்டப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி படத்தின் தலைப்பை “மதராசபட்டிணம்லு” என மாத்திருக்கோம். இதுக்காக ஆறு மாசமா உழைச்சோம்.